வழிபாடு
தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா

Published On 2022-05-21 09:50 IST   |   Update On 2022-05-21 09:50:00 IST
திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் கமலாலய குளத்தை வலம் வந்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்க தலங்களில் முதன்மையானதாக விளங்கிறது. இந்த கோவில் ஆழித்தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு இந்த கோவிலின் தெப்பத் திருவிழாவாகும். திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடி ஆகும். உயரம் சுமார் 42 அடி. 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி கட்டப்பட்ட தெப்பத்தில் சுமார் 500 பேர் ஏறி செல்லும் வகையில் பிரமாண்டமாக இந்த தெப்பம் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி நடைபெற்றது. நேற்று குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்க்காலயா ரோட்டில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை அடைந்தார். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளினார்.

அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தெப்பம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. தெப்பத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.தெப்பம் கமலாலய குளத்தை 3 முறை சுற்றி வந்தது. ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரமானது. இதனால் விடிய, விடிய தெப்பத்திருவிழா நடைபெற்றது. மின்னொளியில் தெப்பம் குளத்தில் சுற்றி வரும் அழகை காண கமலாலய குளத்தின் கரைகளில் பக்தர்கள் திரண்டு நின்றனர்.

தெப்பத்திருவிழா நேற்று தொடங்கி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், நகரசபை தலைவர் புவன பிரியா செந்தில் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், தக்கார் ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Similar News