வழிபாடு
காமாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம்

காமாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம்

Published On 2022-05-20 11:05 IST   |   Update On 2022-05-20 11:05:00 IST
தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் குளத்தில் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் அருகில் உள்ள குளத்தில் தெப்பம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், காமாட்சி அம்மனுக்கு மேள தாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களுடைய தோள்களில் காமாட்சியம்மனை சுமந்து குளக்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்தில் கைத்தட்டி வணங்கி ஆரவாரம் செய்தனர்.

அதன் பின்னர் தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் குளத்தில் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பனையூர் கிராம உடையார் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். தெப்ப திருவிழாவை முன்னிட்டு சென்னை கானாவா? கிராமிய தெம்மாங்கா? என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News