வழிபாடு
தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா

தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

Published On 2022-05-19 06:49 GMT   |   Update On 2022-05-19 06:49 GMT
குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு கமலாலய குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழாவாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் 3 முறை குளத்தை தெப்பம் வலம் வருவது வழக்கம். ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரமாகும். இதனால் விடிய, விடிய தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த தெப்பத்தின் நீளம், அகலம் முறையே 50 அடியும், உயரம் சுமார் 40 அடியும் உடையதாகும். 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி அதன் மீது தெப்பம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 500 பேர் ஏறி வரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தெப்பத்தினை சுற்றி வண்ண ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

தெப்ப திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா, தக்கார் ராணி, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News