வழிபாடு
அழகுநாச்சியம்மன் கோவில் வைகாசி திருவிழா

அழகுநாச்சியம்மன் கோவில் வைகாசி திருவிழா

Published On 2022-05-19 04:40 GMT   |   Update On 2022-05-19 04:40 GMT
திருச்சியை அடுத்த புங்கனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அழகுநாச்சி அம்மன் வாடிவாசல் கருப்பு கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் வைகாசி திருவிழா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது கொரோனா முற்றிலும் குறைந்துள்ளதால் திருவிழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று இரவு தொடங்கியது.

விழாவையொட்டி, வருகிற 23-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் அம்மன் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியும் மற்றும் குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

25-ந்தேதி (புதன்கிழமை) மாலை எல்லை சட்டி உடைத்தல் என்னும் வார் சோறு விடுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு பொதுமக்கள் நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை அழகுநாச்சி அம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவில் வரை பக்தர்கள் கோடு போடுதல் என்னும் நிகழ்ச்சியும், அன்று மதியம் தலை குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அன்று மாலை மின் அலங்காரத்துடன் பூந்தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியும், அன்று இரவு பொதுமக்கள் சார்பாக கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று அன்று மாலை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று இரவு புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் சார்பாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்  பட்டயதார் நந்தகுமார், வேலாயுதம், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News