வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி

அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி

Published On 2022-05-17 05:39 GMT   |   Update On 2022-05-17 05:39 GMT
சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 5-ந் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வந்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவையொட்டி நேற்று முன்தினம் மதியம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.
 
தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர், கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்று விட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை, கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றி கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது. அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News