வழிபாடு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்

Published On 2022-05-13 12:37 IST   |   Update On 2022-05-13 12:37:00 IST
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கருடசேவை திருவிழா வருகிற 15-ந்தேதியும், 19-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய திருவிழாவான கருடசேவை திருவிழா வருகிற 15-ந்தேதியும், 19-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் முகப்பில் பிரம்மாண்டமாக பந்தல், தோரணங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளில் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவில் வெளிப்புற வளாகத்தில் இருபுறமும் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். அதனால் காந்திரோடு தேரடி முதல் பஸ் நிலையம் வரை நடுபகுதிகளில் போடப்பட்டுள்ள தடுப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி வான்மதி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள் பற்றி விரிவாக ஆலோசனை நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

Similar News