வழிபாடு
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2022-05-13 11:27 IST   |   Update On 2022-05-13 11:27:00 IST
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி 2 ஆண்டிற்கு பின்னர் நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டிற்காக இந்த விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி சிம்மவாகனம், அனுமார் வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

கடந்த 10-ந்தேதி அன்று வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்க தோளுக்கினியாள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(சனிக்கிழமை) காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.50 மணி முதல் 5.25 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை இத்தேரோட்டம் நடக்கிறது.

இதை தொடர்ந்து நாளைமறுநாள் (15-ந்தேதி) புஷ்ப யாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் 16-ந்தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News