வழிபாடு
தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா தேரோட்டம்

தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா தேரோட்டம்

Published On 2022-05-10 07:52 GMT   |   Update On 2022-05-10 07:52 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் 9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக காலை 7.30 மணிக்கு சாமியும், அம்பாளும் தட்டு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் பவனி வந்து மீண்டும் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அம்பாள் உடன் கூடிய சாமி, அறம் வளர்த்த நாயகி அம்மன், விநாயகரை தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளச் செய்து மலர்களால் அலங்கரித்து மேள, தாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. அம்பாளுடன் கூடிய சாமியை அம்மன் தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மனை இந்திரன் தேர் சப்பரத்திலும், விநாயகரை பிள்ளையார் தேரிலும் எழுந்தருள செய்தனர்.

சரியாக 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விநாயகர் தேர், அம்மன் தேர், சப்பரத் தேர் என அடுத்தடுத்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் ரதவீதிகளில் வலம் வந்து 12 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தன. பின்னர் சாமிகள் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகம், மோர், தண்ணீர் மற்றும் அன்னதானம் போன்றவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டன.

தேரோட்ட நிகழ்ச்சியில் நாகர்கோவில் மேயர் மகேஷ், அரசு வக்கீல் மதியழகன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சிவகுமார், முன்னாள் கண்காணிப்பாளர் சோனாச்சலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி, பேரூராட்சி தலைவி அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வசந்தி, வள்ளியம்மாள், வீரபத்திர பிள்ளை, காசி, சுரேஷ், ஆனிஎலிசபெத், கலைச்செல்வி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு மேல் கோவில் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகம், பக்த சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News