வழிபாடு
சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார உற்சவம்

Published On 2022-05-07 10:26 IST   |   Update On 2022-05-07 10:26:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த உற்சவ நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார். 14-ந்தேதி(சனிக்கிழமை) அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.15-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வட காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்தருளி இரவு 12 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந்தேதி இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். 17-ந்தேதி இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News