வழிபாடு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் இன்று கண்ணாடி பல்லக்கில் வீதி உலா

Published On 2022-02-28 10:22 IST   |   Update On 2022-02-28 10:22:00 IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா வருகிறார்.
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

22-ந்தேதி கருட சேவை உற்சவம் 23-ந் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, 24-ந்தேதி பல்லக்கு சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26ந்-தேதி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகளில் தேர் வலம் வந்தது.அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று பக்தி பரவச கோ‌ஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். பின்னர் தேர், நிலையை வந்தடைந்தது. இரவு 9 மணி அளவில் தோட்ட திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது.

27-ந்தேதி காலை 6.30 மணிக்கு வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன சேவை யும் நடந்தது. இன்று 28 ந்-தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

அதைத்தொடர்ந்து இன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா வருகிறார். நாளை (1-ந் தேதி) சப்தாவர்ணம் சிறிய திருத்தேரோட்டம் நடக்கிறது.

2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பார்த்தசாரதி சுவாமி தெப்பத்திருவிழா உற்சவம் நடக்கிறது. 5-ந்தேதி நரசிம்மசுவாமி தெப்பம் 6ந்தேதி அரங்கநாதசுவாமி தெப்பம், 7-ந் தேதி ஸ்ரீராமர் சுவாமி தெப்பம், 8-ந்தேதி கஜேந்திர வரதராஜ சுவாமி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Similar News