வழிபாடு
மாசிமக விடையாற்றி விழாவையொட்டி புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சக்கரபாணி வீதி உலா வந்த காட்சி.

மாசிமக விடையாற்றி விழா: புஷ்ப பல்லக்கில் சக்கரபாணி வீதி உலா

Published On 2022-02-21 11:29 IST   |   Update On 2022-02-21 11:29:00 IST
கும்பகோணத்தில் மாசிமக விடையாற்றி விழாவில் புஷ்ப பல்லக்கில் சக்கரபாணி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதையடுத்து விடையாற்றி விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா கொண்டாப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் வந்து மகாமக குளத்தில் நீராடுவார்கள்.

கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது. இதில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 6 கோவிலில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்றது.

மேலும் நாகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆகிய 6 கோவிலில் மாசி மகத்தன்று ஏகதின உற்சவம் நடந்தது. கடந்த 17-ந் தேதி மாசி மகத்தன்று 12 சிவாலயங்களிலிருந்து சாமி - அம்பாள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமக குளத்தில் குளத்தில் புனித நீராடினர்.

இதேபோல் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவில், ராஜகோபாலசாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய கோவில்களில் மாசி மக திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மகத்தன்று சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் ஆதிகும்பேஸ்வரர் - மங்களாம்பிகை அம்பாளுடன் முத்துப்பல்லத்தில் வீதி உலா நடந்தது. இதையடுத்து விடையாற்றி விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. அதேபோல் சக்கரபாணி - தாயாருடன் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதையடுத்து விடையாற்றி விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.

Similar News