வழிபாடு
ஆனைமலை மாசாணியம்மன்

சிறப்பு வாய்ந்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா

Update: 2022-02-17 04:51 GMT
குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குண்டத்தின் வெப்பம் தாக்காமல் இருக்க மாசாணியம்மன் கருவறையில் உள்ள அபிஷேக மூர்த்திக்கு வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் சயன கோலத்தில் வீற்றிருந்து மாசாணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டிற்காக திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 14-வது நாளான கடந்த 14-ந்தேதி ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடந்தது. அங்கு இருந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு, நேற்று முன்தினம் சக்தி கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று குண்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.

இதற்காக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பிறகுகள் குண்டம் மைதானத்தில் சேகரிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து குண்டத்தில் விறகு போட்டு பூக்குண்டம் வளர்க்கப்பட்டது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குண்டத்தின் வெப்பம் தாக்காமல் இருக்கவும், அம்மனின் அருள் குளிர்ச்சியாக கிடைக்கும் வகையில் மாசாணியம்மன் கருவறையில் உள்ள அபிஷேக மூர்த்திக்கு வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

மேலும் வெண்ணெய் உருகாமல் இருந்தால் பக்தர்களுக்கு எந்தவித தீங்கும் நேராது என்பது ஐதீகம். குண்டம் பூவில் இறங்கிய பக்தர்களுக்கு அபிஷேக மூர்த்திக்கு சாத்தப்பட்ட வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை வழிப்பட்டு பிரசாதத்தை பெற்றுக் கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அதை தங்களது பாதங்களில் தடவி கொள்வார்கள். தொடர்ந்து மாலையில் அக்னி கலசம் மற்றும் கும்ப கலசம் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
Tags:    

Similar News