வழிபாடு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழாவில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2022-02-11 09:42 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நேர்த்திக்கடன் விழா இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் நகரின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மறுநாள் பூத்தேர் ஊர்வலம், கடந்த 2ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து தினந்தோறும் அம்மனின் மின்தேர் ஊர்வலம் பல்வேறு மண்டகபடிதாரர்கள் சார்பில் நடைபெற்றது. நேற்று பொடிக்கார வெள்ளாளர் மண்டகபடி சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

மாலையில் கோட்டை மாரியம்மன் மின்தேர் பவனி நடைபெற்றது. வெண்பட்டு உடுத்தி சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நேர்த்திக்கடன் விழா இன்று காலையில் நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு பூக்குழி தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அங்கு கோவில் பூசாரி முதலில் பூக்குழி இறங்கினார். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குழந்தைகளை சுமந்தபடியும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கிய காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இதனால் இன்று கோட்டை மாரியம்மன் கோவில் வளாகமே பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இன்று மாலையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News