வழிபாடு
ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-02-07 03:16 GMT
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி தொடங்கி நேற்று காலை வரை 6 கால யாகபூஜைகள் நடந்தன. யாக பூஜைகள் முடிந்ததும் அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் ராஜகோபுரம், அம்மன் மூலஸ்தான கோபுரம், சோமநாதீஸ்வரர் கோவில் உள்பட பரிவாரமூர்த்திகள் விமானங்களுக்கு மேளதாளங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்டன.

அதனை தொடர்ந்து கோபுரங்கள், விமானங்கள் மீது காலை 8.15 மணிளவில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் கருவறை ரேணுகாம்பாள் அம்மன், சோநாதீஸ்வரர், உமாமகேசுவரி அம்மன் உள்பட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் பக்தர்கள் உபயதாரர்கள் மட்டும் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அதிகாலை முதலே பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் மாடவீதியில் குவிந்து கும்பாபிஷேகம் நடந்ததை தரிசனம் செய்தனர். இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
Tags:    

Similar News