வழிபாடு
ரேணுகாம்பாள் அம்மனையும், யாகபூஜை பொருட்கள் கோவில் சார்பில் கொண்டுவரப்பட்டதையும் படத்தில் காணலாம்.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ந் தேதி நடக்கிறது

Published On 2022-02-04 13:47 IST   |   Update On 2022-02-04 13:47:00 IST
6-ந் தேதி 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம், நடக்கிறது.
கண்ணமங்கலம் அருகே படவேடு கிராமத்தில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

விழாவையொட்டி புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு, சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழாவின் தொடக்கமாக நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக, லட்சுமி, கோபூஜை, கஜபூஜை நடந்தது. பின்னர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்து, புதிய ராஜகோபுர வாசல் வழியாக பசு, யானையை பக்தர்கள் அழைத்து வந்தனர். மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், நேற்று முதல் கால யாகபூஜைகளும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 2-ம் கால யாகபூஜைகளும், மாலை 3-ம் கால யாக பூஜைகளும் நடக்கிறது. 5-ந் தேதி காலை விசேஷசாந்தியுடன், 4-ம் கால பூஜை, மாலை 5-ம் கால பூஜையும் நடக்கிறது.

தொடர்ந்து 6-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் 6-ம் கால பூஜை, 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம், நடக்கிறது. .மாலை 7 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, டி.வி.எஸ். தலைவர் வேணுசீனிவாசன் உள்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) க.ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News