வழிபாடு
பிரதிஷ்டை செய்யப்பட்ட சண்டிகேஸ்வரர்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை

Published On 2022-02-04 11:43 IST   |   Update On 2022-02-04 11:43:00 IST
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் சண்டிகேஸ்வரர். பிரசித்திப்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் சன்னதியின் பின்னே சண்டிகேஸ்வரர் காவல் தெய்வமாக உள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து பாகம் சேதம் அடைந்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

இந்த நிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்கு பதிலாக புதிய சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது கடந்த மாதம் 21-ந் தேதி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒரு நாள் சயனத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதையடுத்து மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ தலைமையில் அவரது பேரன் சஜித் சங்கர நாராயணரூ முன்னிலையில் கடந்த 3 தினங்களாக பல்வேறு பூஜைகள் நடந்தது.

இந்தநிலையில், நேற்று சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. காலை 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், தொடர்ந்து சண்டிகேஸ்வரர் சிலைக்கு பிரதிஷ்டை வழிபாடும் நடந்தது. பின்னர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலக மேலாளர் தங்கம், பொறியாளர் ராஜ்குமார், கண்காணிப்பாளர்கள் சிவகுமார், ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், அரசுமண்டல ஸ்தபதி செந்தில், சிலை வடிவமைத்த ஸ்தபதி சேகர் ஆச்சாரி, தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்குமார், தெற்கு மண்மடம் திலீபன் நம்பூதிரி, வட்ட பள்ளிமடம் பிரசாத் நம்பூதிரி, இயல், இசை நாடக சங்க தலைவர் குமரேச பிள்ளை, கோவில் மேல்சாந்திகள், கீழ்சாந்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Similar News