வழிபாடு
சுசீந்திரம் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை இன்று நடக்கிறது

சுசீந்திரம் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை இன்று நடக்கிறது

Published On 2022-02-03 09:51 IST   |   Update On 2022-02-03 09:51:00 IST
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை இன்று (வியாழக்கிழமை) செய்யப்பட உள்ளது.
சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் சண்டிகேஸ்வரர். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலிலும் சன்னதியின் பின்னே சண்டிகேஸ்வரர் காவல் தெய்வமாக உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து பாகம் சிதலமடைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்கு பதிலாக புதிய சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது கடந்த மாதம் 21-ந் தேதி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒருநாள் சயன வாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ தலைமையில் காலையில் அனுக்ஞாபூஜை, ஜீவ கலச பூஜை மற்றும் பிரதிஷ்டை கலச பூஜைகள் நடந்தது. மதியம் 1 மணிக்கு மயிலாடியை சேர்ந்த ஸ்தபதி சேகர் ஆச்சாரி தலைமையில் சண்டிகேஸ்வரர் பழைய சிலையை அகற்றும் பணி நடந்தது. இதில் நெல்லை மண்டல நகை சரிபார்க்கும் உதவி ஆணையர் சங்கர், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்குமார், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், முன்னாள் கண்காணிப்பாளர் சோணாசலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், தெற்கு மண் மடம் திலீபன் நம்பூதிரி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு பழைய சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணிக்கு பிம்ப பரிகாரம், பிம்பசுத்தி, பிம்பகிரிகைகள், ஜலாதி வாசகலசாபிஷேகம் ஆகியவை புதிய சண்டிகேஸ்வரர் சிலைக்கு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜையும், காலை 10.30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதலும், பிரதிஷ்டை வழிபாடும் நடக்கிறது.

பழைய சிலை பத்திரமாக சுசீந்திரம் கோவில் லாக்கரில் பாதுகாக்கப்படும். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சண்டிகேஸ்வரர் சிலை பத்திரமாக வைக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News