வழிபாடு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published On 2022-02-02 14:06 IST   |   Update On 2022-02-02 14:06:00 IST
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பொட்டு கட்டுதல் வைபவம் போன்றவை நடைபெற்றது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணியளவில் அம்மனின் கொடி நகர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் நடைபெற்றது.

காலை 9 மணியளவில் சபா மண்டபத்தில் இருந்து மஞ்சள்புடவை, திருமாங்கல்யம் உள்பட பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பொட்டு கட்டுதல் வைபவம், விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தலைமையில், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சபா செயலாளர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது.

அதைத்தொடர்ந்து கொடி மரத்தில் தர்ப்பைபுல் கட்டப்பட்டு, திண்டுக்கல் மார்க்கெட் தெரு சாம்பான்குலத்தாரால் கொண்டு வரப்பட்ட பாலக்கொம்பு கொடி மரத்தின் முன்பு ஊன்றப்பட்டது. அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் நிர்வாகிகள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதில் அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

அப்போது சுற்றி இருந்த பக்தர்கள் "ஓம்சக்தி பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். அதன்பிறகு கோவில் மண்டபத்தில் விஸ்வகர்ம அறக்கட்டளை நிர்வாகி குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா, கோவில் கலையரங்கில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது.

Similar News