வழிபாடு
நாங்கூர் நாராயணப் பெருமாள்

நாங்கூர் நாராயணப் பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் இன்று நடக்கிறது

Published On 2022-02-02 10:13 IST   |   Update On 2022-02-02 10:13:00 IST
நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள்களும் எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் மீது பாசுரங்களை பாடி தீபாராதனை காட்டும் நிகழ்ச்சியே கருடசேவை உற்சவம் ஆகும்.
திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியை சுற்றி ஒரே தொகுப்பாக 11 பெருமாள் கோவில்கள் உள்ளன. நாங்கூர் மணி மாடகோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள்களும் எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் மீது பாசுரங்களை பாடி தீபாராதனை காட்டும் நிகழ்ச்சியே கருடசேவை உற்சவம் ஆகும்.

அதன்படி கருடசேவை உற்சவம் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) திருமங்கை ஆழ்வார், திருநகரி கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் மங்கைமடம், காவளம்பாடி, திருமணிக்கூடம், பார்த்தன்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள பெருமாள்களுக்கு கருட சேவை உற்சவத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு மாலை செம்பதனிருப்பு கிராமத்தில் உள்ள மணிகர்ணிகை ஆற்றில் இறங்கி மஞ்சள் குளி மண்டபத்திற்கு வந்தது.

அங்கு திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நேற்று மாலை நாங்கூர் கிராமத்தை நோக்கி பக்தர்கள் புடைசூழ திருமங்கையாழ்வார் புறப்பட்டு சென்றார். கருடசேவை உற்சவ நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம முக்கியஸ்தர்கள் ராஜதுரை, அன்பு, கோவில் ஆய்வர் மதியழகன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Similar News