வழிபாடு
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் 2-வது நாளாக குவிந்த பக்தர்கள்

Published On 2022-02-02 08:35 IST   |   Update On 2022-02-02 08:35:00 IST
தை அமாவாசையானது நேற்று பகல் 12 மணி வரையிலும் இருந்ததால் இரண்டாவது நாளாக நேற்றும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தை அமாவாசை, ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து சாமி தரிசனம் செய்வார்கள்.

அதுபோல் இந்த ஆண்டின் தை அமாவாசையான நேற்று முன்தினம் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் புனித நீராடி விட்டு ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த நிலையில் தை அமாவாசையானது நேற்று பகல் 12 மணி வரையிலும் இருந்ததால் இரண்டாவது நாளாக நேற்றும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததுடன், இவ்வாறு புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பண பூஜை செய்தும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடிவிட்டு சாமி மற்றும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிக மிக குறைவாகவே காணப்பட்டு வந்ததால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாகவே ராமேசுவரம் கோவில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மேலும் பக்தர்களை நம்பி வாழும் ஓட்டல் மற்றும் சிறு கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News