வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில்

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை

Published On 2022-02-01 15:00 IST   |   Update On 2022-02-01 15:00:00 IST
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. எனினும், கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந்தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்படுமா அல்லது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா, மேலும் கோவிலின் நான்கு மாட வீதிகளில் காலை, மாலை என இருவேளை வாகனச் சேவை நடக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது.

இந்தநிலையில் அறநிலையத்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து இந்த மாதம் முதல் வாரத்தில் சித்தூர் மாவட்ட கலெக்டர் எம்.ஹரிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது.

முன்னதாக, பிரம்மோற்சவ விழாவை நடத்துவது குறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அதிகாரிகள் சமீபத்தில் சித்தூா் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இந்த மாதம் முதல் வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை சாதாரணமாக நடத்த மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலிலும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை சாதாரணமாக நடத்த மாநில அறநிலையத்துறை அனுமதிக்கும், எனப் பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையே, நேற்றில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. முதலில் கோவிலில் வண்ணம் பூசும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதுதவிர மற்ற ஏற்பாடுகளும் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Similar News