ஆன்மிகம்
முருகன்

குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி

Published On 2021-11-05 08:04 GMT   |   Update On 2021-11-05 08:04 GMT
சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவனின் குமாரனான முருகப்பெருமானை சஷ்டி திதியில் வணங்கினால், மக்கள் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மந்திரத்தில் உயர்ந்தது காயத்ரி. நதிகளில் புனிதமானது கங்கை. பசுக்களில் சிறந்தது காமதேனு. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில் சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம்.

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கிருத்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவை. இவற்றில் கந்தசஷ்டி விரதம் குழந்தை பாக்கியத்தை அளிக்கக் கூடியது.

‘சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் கரு வளரும்’.

இது மருவி ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்றாகி விட்டது.

‘சஷ்டி திதி’ என்பது அமாவாசையில் இருந்து ஆறாம் நாள் வருவதாகும்.

ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளதால், சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவனின் குமாரனான முருகப்பெருமானை சஷ்டி திதியில் வணங்கினால், மக்கள் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

முருகன் கையில் உள்ள வேல், ஞான சக்தியினை குறிக்கிறது. அனைத்து துன்பங்களும் ஞானத்தினால் விலகும்.

சூரபத்மன், சிவனை நோக்கி தவம் இருந்து சிவபெருமானால் கூட தனக்கு இறப்பு நேரக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான். பின்னர் அவன் தேவர்களையும், மற்றவர்களையும் கடுமையாக துன்புறுத்தினான்.

இதுகுறித்து திருமால், பிரம்மா, இந்திரன் உள்ளிட்டோர் சிவனிடம் முறையிட்டனர். எனது சக்தியால் பிறக்கும் மகன் சூரனை அடக்குவான் என்று சிவபெருமான் கூறினார்.

பின்னர் சிவபெருமான் தவநிலையில் யோகத்தில் ஆழ்ந்தார். இந்தநிலையில் அவருக்கு இல்லற உணர்வை ஏற்படுத்திட தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினார்கள். மன்மதனும் யோக நிலையில் இருக்கும் சிவன் மீது மலர் கணைகளை எய்தான். தவ நிலை கலைந்து சிவன் கோபம் கொண்டு, தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பிறகு அவனது மனைவி ரதியின் வேண்டுகோளை ஏற்று, மன்மதனுக்கு பிறர் கண்களுக்கு புலப்படாத உயிர்நிலையை வழங்கினார்.

தேவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார். ஆறு பொறிகளையும் வாயு, அக்னி இருவரும் கங்கையில் கொண்டு போய் சேர்த்தனர். கங்கையோ, அந்த தீப்பொறிகளை கடைசியாக சரவணப் பொய்கையில் கொண்டுபோய் விட்டாள். அங்கிருந்த ஆறு தாமரை களில் சென்று தஞ்சம் அடைந்த தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக உருமாறி தவழ்ந்தன.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் உலக மக்கள் உயர்வுக்காக இவ்வாறு திருஅவதாரம் செய்தார்.

‘‘அருவமும், உருவுமாகி அநாதியாய்
பலவாயொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாக
கருணை கூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒரு திருமுருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய’’

இவ்வாறு முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது.

சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் இருந்த குழந்தைகளையும், ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். குழந்தைகளை பார்க்க வந்த பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர எடுத்து அணைத்துக் கொண்டார். அக்குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆறுமுகங்கள் 12 கரங்கள் கொண்ட ஒரே குழந்தையானது. அந்தக்குழந்தைக்கு ‘கந்தன்’ என பெயரிட்டார்.

முருகன் உமாதேவியாரிடம் வேல் பெற்று, சூரனுடன் போருக்கு தயாரானார். முன்னதாக சூரபத்மனிடம், வீரபாகு தேவரை தூதாக அனுப்பினார். சூரபத்மன் அந்த சுமுக பேச்சுவார்த்தைக்கு இணங்காததால் போர் முண்டது. ஆறு நாட்கள் போர் நடைபெற்றது. போரில் சிங்கமுகன், தாரகாசுரன், பானுகோபன் ஆகியோர் இறந்தனர். இதனால் வெகுண்டெழுந்த சூரபத்மன் மாயைகளைக் காட்டி முருகனுடன் போரிட்டான்.

கடைசியாக கடலில் மாமர வடிவில் நின்றான். முருகன் அன்னை பராசக்தி வழங்கிய வேலை தியானித்து செலுத்திட, மாமரம் இரு கூறுகளாகின. அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் ஆனது. முருகன் மயிலை வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் ஏற்றுக் கொண்டார்.

விரதம் இருப்பது எப்படி?

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் பிரதமைக்கு முதல்நாள், ஒரு நேரம் மட்டும் சைவ உணவு உட்கொள்ள வேண்டும். பின் விரத நாளான பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து, முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு காப்பு அணிந்து விரதம் இருக்கத் தொடங்க வேண்டும். தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். முடிந்தவரை கோவிலிலேயே தங்கி இருந்து இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

விரத நாட்களில் சிறிது தண்ணீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது சிறந்தது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வழிபாடுகளை முடித்து, இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பால், பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். ஆறாம் நாளன்று உபவாசம் இருக்கலாம். உடல் நலமின்றி இருப்பவர்கள் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட சர்க்கரை சாதத்தினை சாப்பிடலாம்.

பகலில் உறங்குவது கூடாது. சஷ்டியன்று இரவிலும் விழித்திருக்க வேண்டும். ஆறு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். முருக பக்தர்களுடன் உரையாடுவது, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. கந்தனுடைய வரலாற்றை கேட்க வேண்டும்.

மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடி முருகனை வழிபட்டு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி, பின் தானும் உண்டு விரதத்தினை சிறப்புடன் முடிக்க வேண்டும்.

மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் வெந்து சாம்பலாகும். அனைத்து நலன்களும் கிடைக்கப்பெறுவர். கந்த சஷ்டி கவசத்தினை படித்து மனப்பாடம் செய்தால் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற நபர்களால் செய்யப்பட்ட தீய செய்வினைகளில் இருந்து காப்பாற்றப்படுவோம். நாம் செய்த நல்வினைகளிலும் இருந்து விடுபட்டு உய்யலாம்.

கந்தசஷ்டி தத்துவம்

பகைவனை வெல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி, ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. இந்த விரதத்தை மேற்கொண்டால் ஞானம் பெறலாம். யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுகனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது.

உண்ணாநோன்பு இருப்பதால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும். இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்தசஷ்டி ஆகும்.
Tags:    

Similar News