ஆன்மிகம்
சிக்கமகளூரு தேவிரம்மன் கோவில்

சிக்கமகளூருவில் தேவிரம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது

Published On 2021-11-05 05:49 GMT   |   Update On 2021-11-05 05:49 GMT
சிக்கமகளூருவில் உள்ள தேவிரம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிக்கமகளூரு-தரிகெரே சாலை மல்லனேஹள்ளி கிராமம் பிண்டுகா பகுதியில் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தேவிரம்மன் கோவிலில் 5 நாட்கள் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. சந்திரதிரிகோண மலையில் சுமார் 2,000 அடி உயரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலுக்கு தீபம் ஏற்றும் முறையில் திருவிழா தொடங்கப்பட்டது.

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு முதல் மலையின் உச்சியில் உள்ள தேவிரம்மன் கோவிலுக்கு கரடு, முரடான பாதையில் நடந்து சென்று வரிசையில் நின்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். மேலும் சி.டி.ரவி எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா உள்ளிட்டோர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். அப்போது சி.டி.ரவி எம்.எல்.ஏ.தெரிவித்ததாவது:-

நான் கடந்த 35 ஆண்டுகளாக தேவிரம்மனை தரிசித்து வருகிறேன். இந்த சுற்றுவட்டார மக்கள் நன்றாக இருக்க அன்னையிடம் வேண்டிக்கொண்டேன். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுமக்கள் அதிகமாக வரவில்லை. அடுத்த ஆண்டு அனைவரும் வந்து தரிசனம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவிரம்மன் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிக்கமகளூருவிலிருந்து மல்லேனஹள்ளி கிராமத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இன்று நடக்கும் திருவிழாவில் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் பம்பை முழங்க தானாக கர்ப்பக்கிரக கதவு திறக்கும் அதிசய நிகழ்ச்சி நடக்க உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தீமிதி திருவிழாவும், சனிக்கிழமை பல்லக்கு உற்சவம் மற்றும் ஊர்வலம் நடக்க உள்ளது. கொரோனா காரணமாக வெளியூரை சேர்ந்தவர்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News