ஆன்மிகம்
வெள்ளி குடத்தில் புனித நீர் எடுத்து கோவில் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.

திருவானைக்காவல் கோவிலில் காவிரியில் புனிதநீர் எடுத்து வந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-07-16 06:14 GMT   |   Update On 2021-07-16 06:14 GMT
திருவானைக்காவல் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி காவிரியில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணியளவில் கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் காவிரிகரைக்கு சென்று வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து அதை கோவில் யானை அகிலா மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

அந்த புனிதநீரால் இரவு 7.30 மணிக்கு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் இரண்டாம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெறும். பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் பின்னர் நடராஜரும், சிவகாமி அம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பகல் 12 மணிக்கு திருஅன்னப்பாவடை நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News