ஆன்மிகம்
காரமடையில், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

காரமடை அரங்கநாதர் கோவில், மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

Published On 2021-07-06 09:12 IST   |   Update On 2021-07-06 09:12:00 IST
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நேற்று கோவில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன.

இதில்,புலியகுளம் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவில்கள், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், கோனியம்மன், தண்டு மாரியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் உள்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோபூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய மலைப்பாதை படிக்கட்டு அருகே தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வைக்கப்பட்டது.

அதில் பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் கிருமிநாசினி மருந்து மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஊரடங்கு தளர்வில் நேற்று முதல் நாள் கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.இது போல் கோவில்களில் பூஜை பொருட்கள் கொண்டு வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவையை அடுத்த காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி மாத தேய்பிறை ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற் றது. இதையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடையுடன் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதை தொடர்ந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் அர்ச்சகர் கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். காலை 6 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை வரையும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Similar News