ஆன்மிகம்
பெருவுடையார்-பெரியநாயகி

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

Published On 2021-06-23 08:59 GMT   |   Update On 2021-06-23 08:59 GMT
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண வைபோகம் நடைபெறுகிறது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது. திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழக்கமாக பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண வைபோகம் நடைபெறுகிறது. பக்தர்கள் இன்றி மிக எளிமையாக இந்த திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்றுமாலை நடந்தது. இதையொட்டி நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி இந்த பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Tags:    

Similar News