ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நடராஜருக்கு சிவப்பு, பச்சை சாத்தி தீபாராதனை

Published On 2021-06-23 08:03 GMT   |   Update On 2021-06-23 08:03 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவையொட்டி சுவாமி நடராஜருக்கு சிவப்பு, பச்சை சாத்தி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.

8-ம் திருவிழாவான நேற்று காலையில் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் காலையில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி நடராஜருக்கு காலையில் சிவப்பு சாத்தி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நடராஜருக்கு பச்சை சாத்தி அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தங்க திருவோட்டை பூதம் சுமக்க தங்கச் சப்பரத்தில் வீதி உலா வரக்கூடிய கங்காளநாதர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்க கூடியதாகும். ஆனால் கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

இருந்தாலும் தேருக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் காவலாக இருக்கக்கூடிய தேரடி கருப்பசாமிக்கு தேரோட்டத்திற்கு முன்தினம் கொடை விழா நடைபெறும். அதேபோல் நேற்று இரவில் கருப்பசாமிக்கு கொடைவிழா நடந்தது. இதையொட்டி தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படப்பு தீபாராதனையும் நடந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்களில் ஒளிபரப்பப்பட்டது.
Tags:    

Similar News