ஆன்மிகம்
கோவில் குருக்கள் சாமி விக்கிரகத்தை தோளில் சுமந்து பிரகாரத்தில் ஆடியபடி வலம் வந்த காட்சி.

ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடந்தது

Published On 2021-06-21 09:36 GMT   |   Update On 2021-06-21 09:36 GMT
முழு ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.
ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலின் தலவரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக ராவண சம்காரமும், 2-வது நாள் நிகழ்ச்சியாக விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி கோவிலின் விஸ்வநாதர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய 12 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் சாமி சன்னதி பிரகாரம் வழியாக கொண்டுசென்று கருவறையில் உள்ள சாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் வேடம் அணிந்த கோவில் குருக்கள் சந்தோஷ், விசுவநாதர் சன்னதியில் இருந்து சாமி விக்ரகத்தை தோளில் வைத்து தூக்கியபடி முதல் பிரகாரத்தில் ஆடியபடி வலம் வந்தார். தொடர்ந்து சாமி விக்ரகம் கருவறையில் வைக்கப்பட்டது. பின்னர் சாமி, அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் கோவில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி இணை ஆணையர் பழனிகுமார், ராணி லட்சுமிகுமரன் சேதுபதி, நேர்முக உதவியாளர் கமலநாதன், காசாளர் ராமநாதன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

முழு ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணி அளவில் சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News