ஆன்மிகம்
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்

கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

Published On 2021-06-19 09:25 GMT   |   Update On 2021-06-19 09:25 GMT
கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு தொடங்கிய கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அதன் பின்னர் பரவல் குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தொற்று அதிகரித்து வந்ததால் ஏராளமானோர் பலியாகியும் வந்தனர்.

இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு அறிவித்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது அத்தியாவாசிய பொருட்கள் விற்பனை, மளிகை கடை திறப்பு, உணவகங்கள், சலூன் கடைகள் திறப்பு, அழகு நிலையங்கள் திறப்பு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

தற்போது ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் திறப்பு உள்ளிட்டவைகளுக்கு மட்டும் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும் தடை நீடித்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் கோவில்களில் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வந்தாலும் பக்தர்கள் கோவிலின் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலின் வாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்து வரும் வேளையில் கோவில்களில் மட்டும் தரிசனம் செய்ய அரசு அனுமதிக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளதால் இந்த மாவட்டம் ஆன்மிக மாவட்டமாக உள்ளது. இனிவரும் மாதங்கள் பெரும்பாலும் திருவிழா நடைபெறும். தற்போது கோவில்களில் வாசல் பகுதியில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விரைவில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.
Tags:    

Similar News