ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில்

முழு ஊரடங்கால் திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து

Published On 2021-05-10 07:05 GMT   |   Update On 2021-05-10 07:05 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஊரடங்கை முன்னிட்டு வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 9 நாட்கள் வசந்த உற்சவமும், ஒருநாள் விசாக விழாவுமாக 10 நாட்கள் வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். வசந்தஉற்சவத்தையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி கோவிலுக்குள் உள்ள வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதற்காக வசந்த மண்டபத்தின் மைய பகுதியில் தெப்பம்போல தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் கோடை வெப்பம் தணியும் என்பது நம்பிக்கை.

திருவிழாவின் 10-வது நாளாக மதுரை மாநகர் பகுதியில் இருந்தும், திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் பன்னீர்காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி என்று பல்வேறு விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை விசாகத் திருநாளில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப் பெருமான் தன்இருப்பிடத்தை விட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சண்முகப்பெருமானுக்கு காலையிலிருந்து மாலை வரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளா காட்சியாக அமையும்

இந்தஆண்டிற்கான வைகாசி விசாக விழா வருகின்ற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட வேண்டும். இதேபோல 25ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகாசி விசாக விழா நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா பரவல் 2-வது அலை அதிவேகமாக பரவுதலையொட்டி ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் மூடப்பட்டுள்ளது. ஆகவே திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர்அந்த அறிக்கையில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News