ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் ரத்து

Published On 2021-04-23 08:38 GMT   |   Update On 2021-04-23 08:38 GMT
இந்த ஆண்டு தேவநாதசுவாமி கோவிலில் நடக்க இருந்த சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான நித்திய பூஜைகள் மட்டும் நடைபெறும்.
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவதும், அதில் சித்ரா பவுர்ணமியன்று தேர் உற்சவம் நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி, 28-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இதில் 26-ந் தேதி தேரோட்டம் நடக்க இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-வது அலை காரணமாக தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடனும், பக்தர்கள் நலன்கருதியும், கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டு, அதனை தவறாது கடைபிடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் இந்த ஆண்டு தேவநாதசுவாமி கோவிலில் நடக்க இருந்த சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான நித்திய பூஜைகள் மட்டும் நடைபெறும். மேலும் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், மறுநாள் (திங்கட்கிழமை) சித்ரா பவுர்ணமி என்பதாலும் பக்தர்கள் கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்துதல், சுவாமி தரிசனம் ஆகியவற்றுக்காக கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News