ஆன்மிகம்
தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் சுத்திகிரியை பூஜை நடந்த போது எடுத்த படம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-03-19 07:36 IST   |   Update On 2021-03-19 07:36:00 IST
பங்குனி மாத பூஜையை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவனந்தபுரம் :

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், படி பூஜை போன்றவை நடந்தன.

மாத பூஜையின் தொடர்ச்சியாக ஆறாட்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று சன்னிதானத்தில் தந்திரி தலைமையில் சுத்திகிரியை பூஜை நடந்தது.

திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28- ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

விழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News