ஆன்மிகம்
நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் விழா

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

Published On 2021-03-18 08:16 GMT   |   Update On 2021-03-18 08:16 GMT
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த வாரம் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக பூக்குண்டம் இறங்குவதற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களும், பூவாரிப்போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் வந்திருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். மேலும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கரும்பு தொட்டில் கட்டிவருதல், உருவாரம் பிடித்து வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்றவற்றில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்தநிலையில் திருவிழா குறித்து மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் எட்டுப்பட்டி ஊர் தர்மகர்த்தாக்கள் கூறியதாவது:- தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தலையொட்டியும் அரசு விதிமுறைகளின்படி கூட்டம் சேராமல், தனிமனித இடைவெளியை கடைபிடித்து கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே நன்செய் இடையார் மாரியம்மனுக்கு கரும்பு தொட்டில் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தும் பக்தர்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தங்களது நேர்த்திக்கடன்களை செய்து கொள்ளலாம்.

மேலும் வடிசோறு, பூக்குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தல் மற்றும் மஞ்சள் நீராடல் நடைபெறும் நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு வேண்டுகோளின்படி அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே வேண்டுதல் உள்ள பக்தர்கள் முன்னதாக அல்லது திருவிழா முடிந்த பிறகு செய்து கொள்ளலாம் எனவும் அரசு உத்தரவுபடி நடக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News