ஆன்மிகம்
திருப்புவனம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்ததை படத்தில் காணலாம்.

திருப்புவனம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-06 06:55 GMT   |   Update On 2021-03-06 06:55 GMT
திருப்புவனம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் கொடியேற்றப்பட்டது.

திருப்புவனம் புதூரில் மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.பின்னர் மாரியம்மன் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு கொடிமரம், மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன், மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.

இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று காலை முதல் இரவு வரை விரதம் இருந்து வரும் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, உருவபொம்மை எடுத்தல், கரும்புள்ளி- செம்புள்ளி குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர்.
Tags:    

Similar News