ஆன்மிகம்
கடல் பதமிடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா

Published On 2021-03-05 02:52 GMT   |   Update On 2021-03-05 02:52 GMT
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது அவதார தினவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது அவதார தினவிழா கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடைபெற்றது. இரவில் பணிவிடைக்கு பின்னர் அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

விழாவின் சிகர நாளான நேற்று அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வந்தனர். அப்போது கடற்கரையில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அய்யா சிவ சிவ அரகரா அரகரா’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவதார விழா பணிவிடைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

முன்னதாக அய்யா வைகுண்டர் அவதாரபதியில் புதிதாக அமைக்கப்பட்ட கல்நிலை வாயிலை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News