ஆன்மிகம்
உடலில் சேறு பூசி, இடுப்பில் வேப்பிலை கட்டிக்கொண்ட சிறுவர்கள், உடலில் அலுமினிய வர்ணம் பூசி மகிழ்ந்த வாலிபர்கள்.

பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்

Published On 2021-03-04 05:38 GMT   |   Update On 2021-03-04 05:38 GMT
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாக பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் குடிகொண்டு வடக்கு திசை பார்த்து செல்லியாண்டியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி ஆகிய 3 புண்ணிய நதிகள் இணையும் கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலின் வட திசையில் 18 பட்டி கிராமங்களின் அதி தேவதையாக செல்லியாண்டியம்மன் உள்ளார்.

இந்த கோவிலின் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுடன் திருவிழா தொடங்கியது. செல்லியாண்டியம்மன் கோவிலுடன் வகையறா கோவில்களான மாரியம்மன், எல்லையம்மன் கோவில்களிலும் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி பூஜைகள் நடந்தன. பிப்ரவரி 23-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. 24-ந் தேதி கொடிஏற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் விட்டு வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் செல்லியாண்டியம்மனுக்கு பக்தர்கள் நீராட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் கருவறையில் உள்ள செல்லியாண்டியம்மனுக்கு பெண்கள் புனித நீர், பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் நீராட்டு செய்தனர். இதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் இரவு முதலே காத்திருந்து வழிபாடு செய்தனர்.

செல்லியாண்டியம்மன் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியாகும். பவானி மேட்டூர் ரோட்டில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து கோவில் பூசாரிகள், முக்கிய நிர்வாகிகள், பக்தர்கள் நேற்று காலை எல்லை மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அம்மை அழைத்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட குதிரைக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது குதிரை துளுக்கியது. அதைத்தொடர்ந்து பூசாரி பாலகிருஷ்ணன் படைக்கலன்களை சுமந்து கொண்டு செல்லியாண்டியம்மன் கோவில் நோக்கி புறப்பட்டார். குதிரை, பூங்கரகம் ஆகியவற்றுடன் படைக்கல ஊர்வலம் தொடங்கியது.

அப்போது பவானி எல்லையம்மன் கோவில் முதல் செல்லியாண்டியம்மன் கோவில்வரை பக்தர்கள் திரண்டு இருந்து வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் கிடந்த புழுதியில் தண்ணீர் சேர்ந்ததால் உருவான சேற்றை எடுத்து ஆண் பக்தர்கள் தங்கள் உடலில் பூசிக்கொண்டனர். அதிக வெயில் இருந்ததால் சாலையில் தண்ணீர் விடப்பட்டது. இந்த தண்ணீர் மண்ணில் கலந்து சேறாக மாறியது. இதனை உடல் முழுக்க பூசி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உடலில் சேறு பூசி நேர்ச்சை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதுபோல் பக்தர்கள் பலரும் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். கடவுள் வேடங்கள், ராட்சத வேடங்கள், பேய் வேடங்கள் போட்டு வந்தனர். உடல் முழுவதும் கரி, வண்ண பெயிண்டுகள், அலுமினிய வண்ண பெயிண்ட்டுகள் பூசியும் பலரும் நடமாடினார்கள்.

சாலையோரங்களிலும், வீடுகள் மற்றும் கடைகளின் மாடிகளில் இருந்த பக்தர்கள் குதிரை மற்றும் படைக்கலன் எடுத்து வந்தவர், பூங்கரகம் எடுத்தவரின் பாதங்களுக்கு பூஜை செய்து வணங்கினார்கள். சாமிக்கு தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து வழிபட்டனர். மேலும் நேர்ச்சையாக உப்பு-மிளகு, காய்கறி, இனிப்பு உள்பட பல்வேறு பொருட்களை வீசினார்கள். இந்த பொருட்களுடன் சில்லரை காசுகளையும் வைத்து வீசினார்கள். சில்லரை காசுகள் மற்றும் பொருட்களை இளைஞர்கள், சிறுவர்கள் போட்டி போட்டு சேகரித்தனர்.

தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் மூலம் பக்தர்களுக்கு மோர், கூழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த ஊர்வலம் மாலையில் கோவிலை வந்து சேர்ந்தது. இதற்கிடையே பொங்கல் விழாவையும் பொதுமக்கள் கொண்டாடினார்கள். மாவிளக்கு பூஜையும் நடந்தது.

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலையில் மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கம்பத்தை ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 7-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News