ஆன்மிகம்
தாயார்களுடன் சுந்தரராஜபெருமாள் பொய்கைகரைபட்டி தெப்பகுளத்தில் எழுந்தருளி கரையை சுற்றி வலம் வந்த காட்சி.

கள்ளழகர் கோவில் தெப்ப திருவிழா: குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையில் காட்சி தந்த பெருமாள்

Published On 2021-03-01 08:17 IST   |   Update On 2021-03-01 08:17:00 IST
கள்ளழகர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி, குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை வலம் வந்து பெருமாள் காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலானது, திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது

இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் பவுர்ணமி நாளன்று நடைபெறும் தெப்ப திருவிழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான விழாவானது கடந்த 26-ந் தேதி கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நடந்தது.

இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி. வர்ணக்குடைகள் பரிவாரங்களுடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். வழிநெடுக பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டிக்கு வந்து சேர்ந்து, அங்குள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். இந்த ஆண்டு குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை பெருமாள் வலம் வந்து காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு தெப்பக்குளத்தின் கிழக்கில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள்-தேவியர்களுடன் எழுந்தருளினார். அப்போது, வேத மந்திரங்கள் முழங்க விஷேச பூஜைகளும், தீபாரதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலையில் கள்ளழகர் கோவிலுக்கு திரும்பி இருப்பிடம் சேர்ந்தார்.

Similar News