விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மாசி மகத்தை யொட்டி பொதுமக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அதன்படி மாசிமகத்தையொட்டி நேற்று தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் மணிமுக்தாற்றில் குவிந்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால், விழாவுக்கு வந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊற்றுகளில் நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் ஆற்றங்கரை விநாயகரை தரிசனம் செய்து விட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலிலும் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்த பிறகு வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் வழியாக வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான மக்கள் விருத்தாசலத்தில் குவிந்ததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கோவில் நந்தவனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவரை மாசி மகம் நடந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி இருந்ததால் ராமச்சந்திரன் பேட்டை ஆற்று இறக்கத்திலும், ஆயியார் மடத்தெரு இறக்கத்திலும் தண்ணீர் இல்லாத இடங்களில் மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.