ஆன்மிகம்
திருவண்ணாமலை அருகே கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருகே கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

Published On 2021-02-27 04:52 GMT   |   Update On 2021-02-27 04:52 GMT
திருவண்ணாமலை அருேக கவுதம நிதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர், குழந்தைப்பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாகப் புராணங்கள் கூறுகிறது.

சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று மகம் நட்சத்திரத்தில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், பின்னர் கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம்.

அதன்படி மாசி மகமான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர் அருணாசலேஸ்வரர் சந்திரசேகரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து உற்சவர் அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக திருவண்ணாமலை அருேக பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த நதி கரையில் முதலில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அடுத்ததாக தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன. அப்போது பிரதான அர்ச்சகர்கள் திரிசூலத்தை கவுதமநதிக்கு கொண்டு சென்று 3 முைற புனிதநீரில் மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

அந்த நேரத்தில் கவுதமநதியில் கூடியிருந்த திரளான பக்தர்கள் நீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். அங்குக் கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர் திதி கொடுத்த நேரத்தில் பக்தர்களும் கவுதம நதி கரையில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

அங்கு, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுதம நதியில் தீர்த்தவாரி நடந்த இடத்தைச் சுற்றிலும் இரும்புத்தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத்துறையினர், கோவில் அலுவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News