திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார்.
அதன்படி நேற்று தில்லை தெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ரத வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பால், பழம் உள்ளிட்ட 20 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து அம்மன் புறப்பாடாகி மண்டகப்படிதாரர் மண்டபத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.