ஆன்மிகம்
அலங்காரத்தில் முருகன

இன்று தைப்பூசம்: திருப்பரங்குன்றம்-சோலைமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-01-28 08:08 GMT   |   Update On 2021-01-28 08:08 GMT
திருப்பரங்குன்றம்-சோலைமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்ட பல்வேறு வகையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கோவிலில் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
முருகப்பெருமானின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூச விழாவும் ஒன்று.

இன்று தைப்பூச விழா விமரிசையாக திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

காலையில் சுப்பிர மணியசுவாமி-தெய்வானை, முத்துக்குமார சுவாமி-தெய்வானை ஆகிய 2 சுவாமிகளுக்கு உற்சவர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபா ராதனைகள் நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி காலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்ட பல்வேறு வகையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கோவிலில் வந்து தரிசனம் செய்து சென்றனர்.

கிராம மக்கள் நேற்று இரவே வந்து திருப்பரங்குன்றம் பகுதி மண்டபங்களில் தங்கியிருந்து அதிகாலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் கோவிலிலும் உச்சிக்கால வேளையில் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.

ராஜ அலங்காரத்தில் பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி- தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.

மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.

அன்று பூதவாகனத்திலும், மறுநாள் அன்ன வாகனத்திலும், 21-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 22-ந் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 23-ந் தேதி பூச்சப்பரத்திலும் சாமி புறப்பாடாகி திருவிழா நடந்தது.

24-ந் தேதி யானை வாகனத்திலும், 25ம் தேதி பல்லக்கு வாகனத்திலும், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது. நேற்று தங்கதேரோட்டமும் அன்று மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும்,

தைப்பூசத்தையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சுவாமி இருப்பிடம் சேரும் நிகழ்ச்சியும் நடைபெருகிறது. இத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News