ஆன்மிகம்
அறுபடை அழகன்

அறுபடை அழகன்... 3-ம் படை முதல்வன்...

Published On 2021-01-28 04:46 GMT   |   Update On 2021-01-28 04:46 GMT
சங்க இலக்கியமான திருமுருகாற்றுபடை முருகப்பெருமானை பாட்டுடை தலைவனாக கொண்டு அவனது அறுபடை வீடுகளை பாடும் காவியமாகும்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்ற சிறப்பு பெற்றது தமிழ் இனம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைகளை வளர்த்தவர்கள், பண்பாட்டை காத்தவர்கள், நாகரிகத்தை உலகிற்கு சொல்லி கொடுத்தவர்கள். காதல், வீரம் இரண்டையும் கண்களாக போற்றி மண்ணின் பெருமைகளை காத்தவர்கள் தமிழர்கள். இந்த சிறப்பு பெற்ற தமிழர்களின் வழிபாட்டு கடவுளாக இருப்பவன் அறுபடை அழகன், முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான். இந்து சமயத்தின் உருவ கடவுள்களுள் ஒருவனாக திகழ்ந்தாலும் அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே. இதனால் முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.

நம் நாட்டில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தை பிற சமயத்தினர் ஆட்சி செய்திருக்கின்றனர். பிற மதத்தினர் நம் தமிழக வளங்களை கொள்ளை அடித்திருக்கின்றனர். அரசர்களின் ஆட்சி, அந்நியர் ஆட்சி என அரசுகள் பலவாறு மாறி இருக்கின்றன. ஆனால் தெய்வ வழிபாடு எவ்வித மாற்றமும் பெறவில்லை. தெய்வத்தை வழிபடுகிற வழக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே இறை நம்பிக்கை, இன்றைக்கு எத்தனை விஞ்ஞான முன்னேற்றமும், வளர்ச்சிகளும் வந்த பிறகும் கூட ஆன்மிகம் தனது வேரை ஆழமாக பரப்பி இருக்கிறது.

புராணங்கள் முருகப்பெருமானை சிவனின் மகனாக உரைக்கின்றன. அதன்படி சிவனிடம் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவண பொய்கையில் 6 பகுதிகளாக விழ, அப்பொறிகளானது குழந்தை வடிவம் ஏற்கிறது. கார்த்திகை பெண்கள் ஆறு பேரால் இந்த ஆறு குழந்தைகளும் வளர்க்கப்படுகின்றன. பின்னர் கார்த்திகை திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளே முருகப்பெருமானின் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் வைகாசி மாத விசாக நட்சத்திர தினம், முருகப்பெருமானது ஜென்ம நட்சத்திர தினம். இந்த தினத்தை பக்தர்கள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைக்கும் கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியரால் இயற்றப்பட்டது. அதேபோல் சங்க இலக்கியமான திருமுருகாற்றுபடை முருகப்பெருமானை பாட்டுடை தலைவனாக கொண்டு அவனது அறுபடை வீடுகளை பாடும் காவியமாகும். இந்த அறுபடை வீடுகளும் ஒவ்வொரு சிறப்பினை கொண்டதாகும். போரில் சூரபத்மனை வென்றபின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த தலம் திருப்பரங்குன்றம். சூரபத்மனை போரிட்டு வென்று வாகை சூடிய திருத்தலம் திருச்செந்தூர். மாங்கனிக்காக விநாயகரோடு போட்டியிட்டு கோபித்து கொண்டு தண்டாயுதபாணியாக நின்றதலம் பழனி. தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் தலம் சுவாமிமலை. சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து குறமகள் வள்ளியை மணந்த தலம் திருத்தணி. தமிழ் மூதாட்டி அவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி-தெய்வானையோடு காட்சி தந்த தலம் பழமுதிர்சோலை.

முருகனின் கரத்தில் இருக்கும் வேல், அநீதி அழிக்கும் ஆயுதம். முருகப்பெருமானை நாடுகிற மனிதர்களின் மனத்துணிவு வேலைவிட உறுதியாக இருந்தால் வாழ்வின் துன்ப கணைகளை தகர்க்க முடியும். முருகனை வழிபடுவர்கள் அக அழகோடு சென்றால், அவர்கள் வாழ்வை பொருளுடையதாக மாற்றி கருணை வழங்குபவன் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
Tags:    

Similar News