ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

தைப்பூசம்: அறுபடை முருகன் கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-01-28 02:10 GMT   |   Update On 2021-01-28 02:10 GMT
தைப்பூசமான இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அருள்பாலிக்கின்றனர்.
 
இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை மட்டுமே வீதி உலா வருவ வழக்கம். ஆனால் தைப்பூச திருநாள் அன்று மட்டும் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், 10மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்டை தீபாராதனையும் நடக்கிறது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலைவாய் உகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நாளை நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.

பழனிமலை முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து நாளை மாலை 4.20 மணிக்கு தைப்பூச திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 25 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்யாத மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் தரிசனம் மட்டுமே செய்து விட்டு உடனடியாக கிளம்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை சுவாமி நாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று  காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்து. 5-ம் படைவீடான இங்கு தைப்பூச திருவிழாவை காண பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

6-வது படை வீடான அழகர் கோவில் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News