ஆன்மிகம்
நெல்மணிகளை இருகைகளில் எடுத்து சாமியை வழிபட்ட பெண் பக்தர்களை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

Published On 2021-01-23 06:56 GMT   |   Update On 2021-01-23 06:56 GMT
நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.

விழாவின் 4-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. அதாவது, வேதபட்டர் என்பவர் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்மணிகளை காயவைத்து விட்டு தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது. சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க காயவைத்த நெல்மணிகள் மழையில் நனைந்து விடுமே என்று வேதனையுடன் வேதபட்டர் வந்து பார்த்தார். அப்போது நெல்மணிகளை ஈசன் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்து அருளியதாக வரலாறு கூறுகிறது. இதுவே ‘திருநெல்வேலி’ என பெயர் வரக்காரணம் என்று கூறப்படுகிறது.

இதை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடந்தது. இதற்காக சுவாமி முன்பு ஒரு பெரிய தட்டில் நெல்மணிகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பக்தர்கள் இருகைகளில் எடுத்து போட்டு சாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

முன்னதாக, காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.

வருகிற 28-ந் தேதி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாள் தைப்பூச தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து 29-ந் தேதி சவுந்தரிய சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடக்கிறது.

வருகிற 30-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித்தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வலம் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News