ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

வெளியூர் பக்தர்களுக்கு தடை: நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா வலைதளங்களில் ஒளிபரப்பு

Published On 2020-12-22 13:01 IST   |   Update On 2020-12-22 13:01:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூர் :

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந் தேதியும், ஆருத்ரா தரிசன விழா 30-ந் தேதியும் நடக்கிறது. இந்த விழாவில் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நேற்று (21-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

28-ந் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த 100 பேருக்கும், 29-ந் தேதி நடராஜர் தேரோட்டத்துக்கு 1,000 பேர், சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டத்துக்கு 400 பேர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேரோட்டங்களுக்கு தலா 200 பேர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

சிதம்பரம் நகரில் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது.

ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழாவில் பங்கேற்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Similar News