ஆன்மிகம்

கள்ளழகர் மீது வேதிப்பொருட்கள் கலந்த நீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது

Published On 2019-04-17 04:22 GMT   |   Update On 2019-04-17 04:22 GMT
தண்ணீர் பீய்ச்சும் வைபவத்தின்போது கள்ளழகர் மீது வேதிப்பொருட்கள் கலந்த நீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என்று கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை வந்தபிறகு கள்ளழகர் மீண்டும் 23-ந்தேதி இருப்பிடம் திரும்புவார். இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெறும். இதில் பக்தர்கள் அவரவருக்குரிய வழக்கப்படி விரதமிருந்து இயற்கையான தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சாமி மீது தண்ணீர் பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறிய செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதிப் பொருட்களை கலந்து பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் சாமி, சாமியின் வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வேதி பொருட்கள் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை பீய்ச்சுகின்றனர். இதுபோன்ற செயல் ஐதீகத்தை மீறும் வகையில் உள்ளன.

எனவே எதிர்வரும் சித்திரை திருவிழாவில் செயற்கையான தோல் பையில் அதிக விசையான குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது. தண்ணீர் பாக்கெட்டுகளையும் பயன்படுத்தக்கூடாது. விரத ஐதீகத்தின்படி இயற்கையான தோல் பைகளை பயன்படுத்தி, சிறிய குழாய் பொருத்தி வேதிப் பொருட்கள், திரவியம் ஏதும் கலக்காமல் சுத்தமான தண்ணீரை மட்டும் சாமி மீது பீய்ச்சி அடிக்க வேண்டும். இந்த தகவலை கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து கூறியுள்ளார்.

Tags:    

Similar News