ஆன்மிகம்
ஆகாசராயர் கோவிலுக்கு பக்தர்கள் மண் குதிரைகளை சுமந்து வந்த போது எடுத்த படம்.

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆகாச ராயருக்கு கிராம மக்கள் நேர்த்திக்கடன்

Published On 2019-04-10 12:30 IST   |   Update On 2019-04-10 12:30:00 IST
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி ஆகாச ராயருக்கு கிராம மக்கள் மண் குதிரைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடை பெறும். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. நாளை (வியாழக்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகள். 12-ந்தேதி பூத வாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளி வாகன காட்சிகள் ஆகியன நடக்கிறது.

13-ந்தேதி புஷ்பவிமானம் மற்றும் கைலாச வாகன காட்சிகளும் நடக்கிறது. 14-ந்தேதி இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 15-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது. 16-ந்தேதி காலை 6 மணிக்குள் பூர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ந்தேதி காலை 7 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. 18-ந்தேதி மாலை 4 மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர் உற்சாகமும், 20-ந்தேதி நடராசர் தரிசனமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு மயில் வாகன காட்சியும் நடைபெறுகிறது.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அவினாசியை அடுத்த ராயம்பாளையம் கிராம மக்கள் மண் குதிரைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ராயம்பாளையத்திலிருந்து களி மண்ணால் செய்யப்பட்ட 4 மண் குதிரைகளை மலர்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் காலை முதல் விரதமிருந்து தாரை, தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடித்து மண்ணினால் அலங்காரமாக செய்யப்பட்ட 4 மண் குதிரைகளை சுமந்து கொண்டு ராயம்பாளையத்திலிருந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது வழிநெடுகிலும் சாலைகளில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் அவர்களை வரவேற்றனர். பக்தர்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ் மற்றும் சர்பத் ஆகியன வழங்கப்பட்டது.

ஆகாச ராயருக்கு சிறப்பு பூஜை செய்து குதிரைகளை அங்கே வரிசையாக நிற்க வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். பின்னர் ஆகாசராயருக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை மற்றும் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News