ஆன்மிகம்

கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா 19-ந்தேதி நடக்கிறது

Published On 2019-02-14 07:49 GMT   |   Update On 2019-02-14 07:49 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

முன்னதாக 18-ந்தேதி மாலை 5.45 மணி அளவில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நிறைநாளில் காலை 8.15 மணி அளவில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்படுகிறார்.

பொய்கைகரைபட்டியில் உள்ள கள்ளழகர் கோவில் தெப்பக்குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

பின்னர் தெப்பக்குளம் செல்லும் சாமியை, வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டி புஷ்கரணி தெப்பத்திற்கு சாமி சென்று, அங்கு கிழக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையடுத்து கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள்.

கடும் வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு பொய்கைகரைபட்டி தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் சாமி குளக்கரையை மட்டும் சுற்றி வருவார். பின்னர் அங்கிருந்து சாமி அதே பரிவாரங்களுடன் வந்த வழியாகவே கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருவார்.

இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News