ஆன்மிகம்

திருநள்ளாறு கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடங்கியது

Published On 2019-02-08 02:56 GMT   |   Update On 2019-02-08 02:56 GMT
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வரும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி 8 கால யாகசாலை பூஜைகள் நடத்தும் வகையில் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5-ந் தேதி வாஸ்து சாந்தி பூஜையும், 6-ந் தேதி தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஆச்சார்ய ரஷாபந்தனம், அக்னி சங்ரகணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாகசாலை மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5-ம் கால யாகசாலை பூஜை, 10-ந் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மாலை 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜையும், காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகமும் நடக்கிறது.
Tags:    

Similar News