ஆன்மிகம்
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா தேரோட்டம்

Published On 2019-01-29 09:45 IST   |   Update On 2019-01-29 09:45:00 IST
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறத்தல், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தலைமைப்பதி பள்ளி அறையில் இருந்து அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார்.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா அமர்ந்து இருக்க பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக மதியம் 2 மணிக்கு வடக்கு ரதவீதியில் தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் பூ போன்ற பொருட்களை அய்யாவுக்கு சுருளாக படைத்து வழிபட்டனர். தேர் மாலையில் நிலைக்கு வந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News